Free counter NEWS FX CASINO LATEST NEWS Foxybingo

புதன், 3 ஜூன், 2009

ஜாங்கிரி!............

எப்போடா நாம இதை சாப்பிடப் போறோம்!....

ஆரஞ்சுக் கலரில் கூரையிலிருந்து சொட்டு சொட்டாய் ஒழுகும் மழை நீரைப் போல பாகு ஒழுகிக் கொண்டிருந்த ஜாங்கிரியை பார்க்கும் போதெல்லாம் இதே எண்ணம் தான் மணிக்கு.

மணி..........ஆந்திராவில் ஊருக்கு ஒதுங்கிய ஒரு தொழிற்பேட்டையில் இருக்கும் தொழிற்சாலையில் எடுபிடி வேலை செய்யும் அடிமை......ஆம் அடிமை தான்.அவன் செய்யும் வேலைக்கு மூன்று வேளை கஞ்சியும் படுத்துக் கொள்ள எலிப் பொந்தும் தான்!சம்பளம் எல்லாம் இல்லை.அங்கிருந்து தப்பித்தும் போக முடியாது.அப்போது அது அடிமை வேலை தானே?

அது ஒரு பெரிய இரும்புத் தொழிற்சாலை.இவனை ஒத்த சிறுவர்கள் இன்னும் நிறைய்ய பேர் இருந்தார்கள்.காலை 7 மணிக்கு துவங்கும் வேலை முடிய இரவு எட்டாகி விடும்.இடையில் டீ எனப்படும் வெந்நீர் கிடைக்கும்.அதுவும் இரு முறை மட்டுமே.மதியம் மஞ்சள் கலர் சோறு ஒரு தட்டு,ஒரு கப் கீரை மட்டும் கிடைக்கும்.அதையும் அதைப் பழகியவர்களால் மட்டுமே சாப்பிட முடியும்.

மணி எப்படி இங்கே வந்தான்?.............நீங்கள் அடிக்கடி சினிமா பார்ப்பவரா?அதுவும் தமிழ் சினிமா?.....அப்படிஎன்றால் இவன் பிளாஷ்பாக் கூட உங்களுக்கு மிகப் பரிச்சயமான ஒன்று தான்.பணக்கார வீட்டுப் பிள்ளை......தாய் இல்லை.....தந்தைக்கு எப்போதும் பிசினஸ் தான்............எனவே கவனிப்பு,பாசம்,கண்டிப்பு இத்யாதி இத்யாதி எதுவுமில்லை.So,வெறுத்துப் போன பிள்ளை வீட்டை விட்டு வெளியேறி............ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் புரிந்திருக்கும்.............!

இரவு எட்டு மணி,வேலை முடிந்து கொட்டடிக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் மணி.காலையில் சுட்டு வைத்த ஜாங்கிரி பீச்சில் காத்திருக்கும் காதலன் போலக் காத்துக் கொண்டிருந்தது வெறுமையாய்.அதைப் பார்த்தவுடன் மணியின் கால்கள் தன்னால் ப்ரேக்கிட்டு நின்றது.

ஒன்னு எவ்வளோ என்றான் சைகையில்.

கடைக்காரனும் புரிந்து கொண்டவனாய் இரண்டு ரூவா என்றான் மோசமான தமிழில்.

2 ரூபாய் என்பது மிகப் பெரிய பணம் மணிக்கு.ஜாங்கிரி ஆசை கனவாய் கலைந்து போய் விடும் போலிருந்தது.தளர்வாய் நடை போடத் தொடங்கினான்.

ராத்திரி கனவெல்லாம் ஜாங்கிரி தான்.இவனுக்குப் பிறந்த நாள் விழா.தட்டு நிறைய்ய ஜாங்கிரிகள்.இரண்டு கைகளிலும் அள்ளி அள்ளி எடுத்துத் தின்றான்.முகமெல்லாம்,சட்டையெல்லாம்,உடலெல்லாம் ஜாங்கிரியும் பாகும் வழிந்தோடிக் கொண்டிருந்தது.பட்டென்று முழிப்பு வந்தது.ச்சே எல்லாம் கனவு.வேறு கனவு.கனவு கலைந்து அழுகையாய் மாறியது.மெதுவாய் மிக மெதுவாய் ரகசியம் பேசுவது போல் அழத் துவங்கினான்.அவனால் அப்போதைக்கு செய்ய முடிந்தது அது ஒன்று தான்.எனவே அதை நன்றாகவே செய்தான்.

அழுகை முடிந்த போது விடிந்து விட்டிருந்தது.மனம் மட்டும் இன்னும் இருட்டாய்.



கதைகள் சினிமாக்களில் எல்லாம் நடக்குமே அதே போல நடந்தது மணிக்கு.ஆம் அவன் காலை வேலைக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது வழியில் ரோட்டில் சிறிய வட்ட வடிவ ஐந்து ரூபாய் நாணயம் பூமிக்குள்ளிருந்து லேசாக எட்டிப் பார்த்து சிரித்தது.இவனால் நம்பவே முடியவில்லை.பர பரவென்று சுற்றும் முற்றும் பார்த்தான்.நல்ல வேலை யாருமில்லை.அவன் குனிந்தும்,காசை எடுத்துப் பையில் போட்டதும் சீதையை மணக்க ராமன் வில்லை ஒடித்த வேகத்தில் நடந்தது.

மணிக்கு இருப்புக் கொள்ளவில்லை.அடிக்கடி தடவிப் பார்த்துக் கொண்டிருந்தான் தன் ட்ரௌசெர் பையை.எப்போடா இரவு ஆகுமென்றிருந்தது.அது மட்டுமல்ல இவன் போகும் நேரத்தில் ஜாங்கிரி தீர்ந்து போய் விட்டது என்று கூறி விடுவனோ என கவலை வேறு.

ஒரு valiyaai வேலை முடிந்து எல்லோரும் கொட்டடிக்குத் திரும்பத் தொடங்கினார்கள்.மணி மெதுவாய் வெளியே வந்தான்.எல்லாரும் முன்னே நடக்க விட்டு இவன் கடைசியாய் நடந்தான்.பின்னே இவன் ஜாங்கிரி சாப்பிடுவதை வேறு யாரும் பார்த்து விட்டால் ஏதடா காசு என்று அடிப்பார்கள்.எனவே கர்ப்பிணிப் பெண்ணாய் மெல்ல நடை போட்டான்.

கடைக்காரனைப் பார்த்து காது வரை பல்லிளுத்து டௌசெர் பைக்குள்ளிருந்து மெதுவாய் அந்த 5 ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொடுத்தான்.கடைக்காரன் நம்ப முடியாதவனாய் காசை திருப்பித் திருப்பிப் பார்த்து விட்டு மூன்று ஜாங்கிரிகளை பேப்பரில் சுற்றிக் கொடுத்தான்.

வாங்கிய மணி ஒரு ஓரமாய் சென்று உட்கார்ந்து மெதுவாய் பிரிக்கத் தொடங்கி அதை ஆசை ஆசையைப் பார்த்தான்.ஒன்றை எடுத்துக் கடிக்கத் தொடங்கிய படியே சுற்றி இருந்த பேப்பரை உன்னித்துப் பார்த்தான்.

வாய் அசைவதை நிறுத்தியது.கண்கள் அந்தப் பேப்பெரையே பார்த்துக் கொண்டிருந்தது.மெதுவாய் கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக் கன்னத்தில் வழிந்து வாய்க்குள் விழுந்தது இப்போது ஜாங்கிரி கொஞ்சம் உப்புக் கரிக்கத் துவங்கியது.

பேப்பரில், தெலுங்கில் என்னமோ எழுதி கீழே இவன் சிரிக்கும் போது எடுத்த போட்டோ இருந்தது.

டிஸ்க்கி: சிறுகதைப் போட்டிக்கான எனது கன்னி முயற்சி.

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நல்ல முயற்சி... இன்னும் நெறைய எழுதுங்க...

அன்புடன் அருணா சொன்னது…

முதல் முயற்சி...நன்றாகவே இருந்தது....பூங்கொத்து!

M.G.ரவிக்குமார்™..., சொன்னது…

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி அருணா.................

Suresh சொன்னது…

super story keep it up....

Suresh சொன்னது…

very nice story keep it up....

M.G.ரவிக்குமார்™..., சொன்னது…

மிக்க நன்றி சுரேஷ்!...