Free counter NEWS FX CASINO LATEST NEWS Foxybingo

புதன், 25 மே, 2011

ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்.....

ஒரு பங்களா வீட்டு நாயும் தெரு நாயும் பேசிக்கிட்ருந்திச்சி!.....

தெரு நாய் : என்னப்பா எப்படி இருக்கே,வாழ்க்கை எல்லாம் எப்படிப் போகுது?....

பங்களா நாய்:நமக்கென்னப்பா சுகம்மா போகுது......மட்டன்,முட்டை,பிஸ்கேட்டுன்னு .....
உனக்கெப்படி.......

தெ.நா: நாளொரு தெரு, பொழுதொரு குப்பத் தொட்டின்னு பொழப்பு ஓடுது!.....

ப.நா: சுகமான வாழ்க்கப்பா உனக்கு.....

தெ.நா:உனக்கென்னப்பா குறைச்சல்.....நல்ல சொகுசா நிழல்ல இருக்கே.......நேரத்துக்கு சாப்பாடு போட்டு,நோவுன்னா மருந்து குடுத்து முதலாளி நல்லா தான வச்சிருக்காரு!..

ப.நா:அடப் போப்பா எல்லாம் கேக்க நல்லா இருக்கும் ஆனா எப்போப் பாரு கட்டிப் போட்டே வச்சிருக்காங்கே......நாலு தெருவுக்குப் போனோம் நாலு நாய்ங்களைப் பாத்து சைட் அடிச்சோம்னு இருக்கா.....என்னதான் இருந்தாலும் தெருநாய் வாழ்க்கை போல வராதுப்பா!.....

தெ.நா:அப்போ எல்லாத்தையும் விட்டுட்டு என் கூட வந்துர்றியா?.......

ப.நா: வரலாம் தான்....ஆனா.......

தெ.நா:என்ன ஆனா?......

ப.நா:இந்த வீட்டு முதலாளி சொன்ன ஒரு வார்த்தை தான் என்னைத் தடுக்குது......

தெ.நா:என்ன சொன்னாரு உன் முதலாளி.....நீ இல்லேன்னா செத்துப் போய்டுவேன்னாரா?..

ப.நா:இல்லப்பா இவருக்கு ஒரு பொண்ணு இருக்கா,சும்மா சினேஹா மாதிரி செமையா இருப்பா!....

தெ.நா:சேரி........

ப.நா:அவளுக்கு ஜாதகத்துல ஏழாம் வீட்ல ராகுவாம் அதனால கல்யாணத்துல ஏதோ தோஷம் வருமாம்....அப்பா சொல்றாரு!ஆனா சினேஹா சொல்லுது ஏழாம் வீட்ல ராகு இல்ல ரகு தான் இருக்காரு நன் அவரைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு......

தெ.நா:சரி தானேப்பா........

ப.நா:ஆனா முதலாளி கண்டிசனா சொல்லிட்டாரு.....அதான் யோசிக்க வேண்டியது இருக்கு.....

தெ.நா:என்னப்பப் போட்டுக் குழப்புற.....அப்படி என்ன தான் சொன்னாரு உன் முதலாளி ?...

ப.நா:இல்ல......இந்த நாய்க்கு வேணாக் கட்டிக் குடுப்பேன் ஆனா அந்த ரகுவுக்குக் கட்டிக் குடுக்கவே மாட்டேன்னு சொல்லிட்டாரு........அதான் கொஞ்சம் வெய்ட் பண்றேன்.....

தெ.நா:டேய்.......அந்தப் பொண்ணு நினைக்குறது ஆசை.......ஆனா நீ படுறியே அது பேராசைடா .......

வெள்ளி, 1 அக்டோபர், 2010

சிறப்பு அடையாள அட்டை - உதவுவோம்

டிஸ்கி: சக கார்க்கி அவரின் பதிவில் கேட்டுக் கொண்ட படி அவரின் பதிவை
அப்படியே எடுத்து இங்கே ஒட்டியுள்ளேன்!.....மிக்க நன்றி சகா!..

சென்ற ஆண்டிலிருந்து, பாரத அரசு, சிறப்பு அடையாள அட்டை வழங்குவதற்கு முயற்சிகள் எடுத்து ஆணையம் அமைத்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அதன் தகவல்களை இங்கேகாணலாம்.

பாரத நாடு, மக்கள் தொகையில் உலகிலேயே இரண்டாமிடத்திலுள்ளது, அதனால், இந்த சிறப்பு அடையாள அட்டை வழங்குதல் என்பது மிகவும் கடினமான பணி.
இந்தப் பதிவின் நோக்கமே, நம்மால் எப்படி இத்திட்டத்திற்கு உதவ முடியும் என்பதற்கான மெய்நிகர் கலந்துரையாடலே.

நம் நாட்டில், மதம், மொழி, இனம், சாதி, சாதிய உட்பிரிவு, நண்பர்கள் குழு, கலைக் குழு போன்ற லட்சக்கணக்கான (ஏன் கோடிக்கணக்கான) சங்கங்கள் உள்ளது. இதில் பதிவு பெற்ற / பதிவு பெறாத சங்கங்கள் என்று வகைப்படுத்தலாம். ஏனெனில், அரசின் பதிவு பெறாத சங்கங்கள் மூலம் தனி நபர் சேவையாற்ற முடியுமே ஒழிய, சிறப்பு அடையாள அட்டை ஏற்படுத்தும் பணியில் பங்கு கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை. எனினும், சிறப்பு அடையாள அட்டை ஆணையம் இவ்விஷயத்தில் தன்னார்வ தொண்டு புரிய விருப்பமுள்ள தனி நபர் மற்றும் நிறுவனங்களையும் பங்கு பெறுவதற்கு வழி வகைகளை செய்துள்ளது.

அதன் விவரங்கள் இங்கே.
இத்திட்டத்தில் பங்கு பேர விருப்பமுள்ள, தன்னார்வ தொண்டு புரிய விருப்பமுள்ள தனி நபர் மற்றும் நிறுவனங்கள் செய்ய வேண்டியது.

தனிநபர்:
முதலில் உங்களின் அனைத்து அரசு ஆவணங்களையும் சரியாக வைத்துக் கொண்டு, பின் வரும் மின்னஞ்சலுக்கு (webadmin-uidai@nic.in) தகவல் அனுப்பவும். பிறகு அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படவும்.(நண்பர்களே: அந்த மின்னஞ்சலுக்குரிய நடவடிக்கை போன்றவை இந்தப் பதிவைத் தாண்டிய விஷயங்கள், அதனால் சொல்ல முடியவில்லை).

நிறுவனங்கள் (பதிவு பெற்ற நிறுவனங்கள்):
பதிவு பெற்ற சபைகள், நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், நண்பர் குழு அமைப்புகள், நற்பணி மன்றங்கள் இந்த சிறப்பு அடையாள அட்டை திட்டத்தில் விருப்பமுள்ள உறுப்பினரையோ அல்லது உறுப்பினர் குழுவையோ
அமைக்கலாம்.
அவ்வாறு அமைக்கப்பட்ட உறுப்பினரோ/குழுவோ முதலில் அந்த அமைப்பினைச் சேர்ந்த உறுப்பினர்களின் பின் வரும் அரசு ஆணையங்களை சரி பார்க்கலாம்.
௧. பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate).
௨. பிறப்பிடச் சான்றிதழ் (Nativity Certificate).
௩. சமுதாயச் சான்றிதழ் (Community Certificate).
இம்மூன்றுமிருந்தால், ஒருவரின் அடிப்படை விவரங்கள் அரசில் பதிவு செய்யப்படுள்ளதாகக் கொள்ளலாம்.
இது தவிர,
௪. வாக்காளர் அடையாள அட்டை (Voter's Identity Card).
௫. குடும்ப அட்டை (Family/Ration Card).
௬. (தனிநபர்) நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number).
௭. கடவுச்சீட்டு (Passport).
மேற்கூறிய ஏழு ஆவணங்களிருந்தால், நம் நாட்டில் பிறந்த ஒருவரின் அனைத்து விவரங்கள் அரசில் பதிவு பெறப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.
(இந்த ஆவணங்கள் மட்டும் தானா, அல்லது வேறு ஏதாவது உள்ளதா என்பது தெரியவில்லை ?)
முதல் முயற்சியே, அவர்கள் உறுப்பினர்கள் மேற்கூறிய ஆவணங்கள் வைத்திருக்கிறார்களா என்பதை சரி பார்ப்பதே.
இரண்டாவதாக, இதில் எதாவது ஒரு ஆவணம் இல்லையென்றால், அதைப் பெற உதவுவது, அது சாத்தியமா ? (நம் நாட்டில் நிலவும் நடை முறைச் சிக்கல்கள் தெரிந்துள்ளதால்) தெரியவில்லை.

இறுதியாக, மேற்கூறிய ஆவணங்களை வைத்துள்ள உறுப்பினர் விவரங்களை, மென்பொருள் வடிவாக்கி, சேமித்து, மூன்றுக்கு மேற்பட்ட மென்தகட்டில் (CD/DVD) பத்திரப்படுத்திவிட்டு, இது தவிர தனியாக பத்திரப்படுத்திய மென்தகடை (CD/DVD)'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சமர்பிக்க வேண்டியது.
இவ்வாறு, ௧௦௦ (நூறு) உறுப்பினர் கொண்ட ௧௦ (பத்து) நிறுவனங்கள் செய்தால், குறிப்பிட்ட கால அளவிற்குள், ௧௦௦௦ (ஆயிரம்) இந்தியர்களின் தகவல்கள் 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்.

கல்வி நிறுவனங்களின் பங்கு:
பள்ளிகள், பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிலையங்கள் தங்களிடம் பயில்வோர் மற்றும் பணி புரிவோர் விவரங்களை 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு வழங்கலாம்'.
இதன் மூலம் அரசின் பணிச் சுமை குறைவதோடல்லாமல், கணிசமான தனி நபர்களின் துல்லியமான விவரங்கள் பிழையின்றி 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்.

பதிவராக:
தமிழ்ப் பதிவராக, நாமும் இவ்விஷயத்தில் சிறு அக்கறை எடுத்துக் கொண்டு, நம்மிடமுள்ள ஆவணங்களையும் சரி பார்த்து விட்டு, நம்மிடம் இல்லாத ஆவணத்தை பெற்று, நம்குடும்பத்தினர் ஆவணங்களையும் பெற்றுக்கொண்டு. தனி நபராக நம் நண்பர்கள் உறவினர்களின் தகவல்களை (குறைந்தது ஐம்பது நபர்கள்) 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சமர்பிக்கலாம்.
ஆயிரக்கணக்கான, தமிழ்ப் பதிவர்களில் பத்து பதிவர்கள் இதனைச் செய்தால், குறைந்தது ஐநூறு நபர்களின் தகவல்கள் பிழையின்றி 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்'.

இந்த பதிவினை பார்க்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், இந்தப் பதிவை தங்கள் நண்பர்கள், உறுப்பினர்கள் மற்றும் தாங்கள் உறுப்பினராக உள்ள வலைக் குழுக்களுக்கு பரிந்துரைப்பதின் மூலம், 'சிறப்பு அடையாள அட்டை திட்டம்' வெற்றியடையச் செய்யலாம்.
பதிவுலகின் மூலம் எத்தனையோ நல்ல விஷயங்கள் நடைபெறுகிறது, இது மட்டும் வெற்றியடையாமலா போய்விடும் ?

திங்கள், 20 செப்டம்பர், 2010

M.G.ரவிக்குமார்,: எல்லாம் நம்ம தலை எழுத்து!.....

M.G.ரவிக்குமார்,: எல்லாம் நம்ம தலை எழுத்து!.....

எல்லாம் நம்ம தலை எழுத்து!.....

எல்லாம் நம்ம தலை எழுத்து!.....

நேரமே சரி இல்லங்க!...

நமக்கு வாய்ச்சது அவ்ளோ தான்!..

இந்த டயலாக்குகளை நாம் அடிக்கடி சொல்லி இருக்கிறோம் அல்லது கேட்டிருக்கிறோம்!...

எல்லாமே நம் தலை விதிப்படி தான் நடக்கிறதா?....இல்லை எல்லாமே நம் கையில் தான் இருக்கிறதா!?....இதைப் பற்றி தான் நேற்று விஜய் டிவியில் நீயா நானா என்று சண்டை போட்டார்கள்!.....

இது ஒரு முடிவில்லாத தர்க்கம்!..இது தான் சரி என்று சுலபத்தில் ஒரு முடிவுக்கு வந்து விட முடியாத வாதம்!..இரண்டு தரப்பிலும் இளைஞர்கள் இருந்து வாதிட்டது சிறப்பு!..

வள்ளுவர் கூட இந்த விசயத்தில் கொஞ்சம் குழம்பி இருக்கிறார்!..அதனால் தான் "முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்" என்றவர் பின்னர் "ஊழிற் பெரு வலி யாவுள" என மாறி விட்டார்!..

எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் நன்மையும்,தீமையும் கலந்தே இருக்கிறது!....அது கறந்த பாலாக இருந்தாலும்,அன்னையின் அன்பாக இருந்தாலும்,சாலை விபத்தாய் இருந்தாலும் இரண்டு குணங்களும் கலந்தே இருக்கிறது.

எனவே நன்மை, தீமை இதில் எது அதிகமோ அதை வைத்தே அந்த விஷயத்தை எடுத்துக் கொள்வது நலம் பயக்கும்!..உதாரணத்திற்கு ஒரு சாலை விபத்தையே எடுத்துக் கொள்வோம்!..விபத்தில் ஒருவர் இறந்து விடுகிறார்!.அவருக்கு மிக இளம் வயது!1 வயதில் ஒரு குழந்தையும்,மனைவியும் இருக்கிறர்கள் என வைத்துக் கொள்வோம் அந்த விபத்து மிகக் கொடியது!..ஆனால் இறந்தவர் பெரும் வியாதியஸ்தர்!..எவ்வளவோ செலவழித்தும் குணமாகாதவர் என்றால் அந்த விபத்தும் நல்லதே இல்லையா?..

அதே போல இந்த விதியையும் எடுத்துக் கொள்வோம்!..நாம் செய்ய வேண்டிய நியாயமான எல்லா முயற்சிகளையும் செய்வோம்!..கிடைத்தால் நல்லது!.இல்லையா விதியின் மேல் பழியைப் போட்டு விட்டு வேறு வேலை பார்க்க போய் விடலாம்!..இது விதியை நம்புபவர்களுக்கு!

ஆனால் விதியை நம்ப மாட்டேன்!..எல்லாம் என்னால் முடியும் என்று சொல்பவர்கள் தான் சந்திக்கும் தோல்விகளை அவ்வளவு எளிதில் புறம் தள்ளி விட மாட்டார்கள்! மாறாக அதிலேயே சிக்கி உழல வேண்டி இருக்கும்!...

எனவே இந்த விதியைப் பற்றி மிகவும் அலட்டிக் கொள்ளாமல் நமக்கு வேண்டும் போது மட்டும் பயன்படுத்தி விட்டு மற்ற நேரங்களில் அதைப் பற்றி கவலைப் படாமல் இருப்பதே புத்திசாலித் தனம்!...

சரியா?.......

வெள்ளி, 16 ஜூலை, 2010

நேசன்.....,: கணவா... - எல்லாமே கனவா.......?

நேசன்.....,: கணவா... - எல்லாமே கனவா.......?

கணவா... - எல்லாமே கனவா.......?

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

ٌ சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!

ٌ என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!

ٌ சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!

ٌ பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

ٌ அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது... பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !

ٌ கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !

ٌ மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
ٌ இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா!
ٌ கணவா... - எல்லாமே கனவா.......?

கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....

4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... .....

2 வருடமொருமுறை கணவன் ...

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
ٌ இது வரமா ..? சாபமா..?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
ٌ கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
ٌ விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வாரவிடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...
ٌ இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்

ٌ இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!

ٌ தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
ٌ விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?

ٌ நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
ٌ பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!
வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!

உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
ٌ விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!
விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா! (இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ )


டிஸ்கி: இது எனக்கு மினஞ்சலில் வந்தது!....இதை எழுதிய நண்பர் யார் எனத் தெரியவில்லை.அவருக்கு என் நன்றிகளும் வணக்கங்களும்!

திங்கள், 21 ஜூன், 2010

ராவணன் .........

எனக்கென்னமோ இந்தப் படத்தைப் பார்த்ததும் முதலில் தோன்றியது மணி எதற்கு இந்தப் படத்திற்கு ராவணன் எனப் பெயர் வைத்தார் என்பது தான்!அப்படி வைக்காமல் விட்டிருந்தால் மக்களிடம் நிலவும் தேவையற்ற எதிர்பார்ப்பைக் கொஞ்சமாவது குறைத்திருக்கும்.இந்தப் படமும் வெற்றியை ருசித்திருக்கும்!....

தியேட்டரில் விபீஷணண்டா,கும்பகர்ணண்டா,சூர்ப்பனகைடி போன்ற குரல்கள் கேட்டுக் கொண்டே இருந்தது!.......கார்த்திக்கை அனுமார் ஆக்கியதற்காக மணிக்கு ஸ்பெஷல் திட்டும் விழுந்தது!.....

எதிர்பார்த்ததைப் போலவே அல்லது வழக்கம் போலவே அரையிருட்டு, சட்டென்று விளங்கிக் கொள்ள இயலாத சுருக்கமான வசனங்கள்,கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போன்ற ஒளிப்பதிவு,வித்தியாசமான இந்திய லொக்கேஷன்கள் இதிலும் இருக்கிறது ஆனால் இன்னும் சிறப்பாக.

படம் முழுக்கப் பச்சை மரங்கள் சூழ்ந்த,அருவிகள்,ஓடைகள் நடை பயிலும் இடங்கள் என்பதாலோ என்னவோ தியேட்டரில் ஏ.சி.யைப் பாதியில் நிறுத்தியும் யாருக்கும் அது தெரியவுமில்லை,வேர்க்கவுமில்லை.

விக்ரம் இன்னும் கந்தசாமியின் தோல்வியிலிருந்து மீளவில்லை போல.கோழி சவுண்ட் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.அவர் பக் பக் என்னும் போதெல்லாம் நமக்கு நஞ்சம் பக் பக் என்கிறது!..( கந்தசாமி இன்னொருவாட்டியா என்று)அதிகம் சொல்ல ஒன்றுமில்லை!.

ஐஸ்......அங்கே இங்கே தாவி,விழுந்து,அழுது,ஏங்கி என நடிக்க என்னென்னவோ செய்கிறார்!நமக்குத் தான் பாவமாய் இருக்கிறது!.....இந்த அழகான பெண்ணிற்கு இவ்வளவு சோதனையா என!....

பிருத்விராஜ்.....இவரைத் திரையில் காட்டியதும் 11 பேர் கை தட்டினார்கள் யார்ரா என்று பார்த்தால் எல்லாம் மலையாளிகள்!.....மொழிப்பற்றாம்..நல்லா இருங்கடே!....(ஐஸைப் பார்த்து எந்தக் கன்னட ரசிகரும் கை தட்டவில்லை!..அவர்களுக்கு தண்ணியில் இருக்கும் மொழிப் பற்று கன்னியில் இல்லை போல!........)மணி சொன்னதைச் செய்திருக்கிறார் போல!...நன்றாகக் கத்துகிறார்!..மனைவியை சந்தேகப்படுகிறார்..கிளைமாக்சில் ஐஸை அணைத்துக் கொண்டு கேமராவைப் பார்த்துக் கொண்டு போஸ் கொடுப்பார் என நினைத்தேன்! ப்ச்..ஏமாற்றிவிட்டார்!..

பிரபு!......வயது, உருவத்திற்கேற்ப நல்ல வேடங்களாய் செய்து கொண்டிருக்கிறார் என எல்லோரும் சொன்னதற்கு இந்தப் படம் ஒரு திருஷ்டிப்பொட்டு!...

இந்தப் படத்தில் முக்கியமாய் எனக்குத் தோன்றியது உடைகள்!......காட்சிகளிீன் சூழ்நிலைக்கேற்ப மிகச் சரியாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது!......அதிலும் கிளைமாக்சில் ஐஸ் அணிந்திருக்கும் அந்த வெள்ளை ஆடை....அட!.......

சுருக்கமாய் சொல்லப் போனால்....ஆய்தஎழுத்து,குரு வரிசையில் மணிக்கு தமிழில் இன்னொரு.....வெற்றியை நழுவ விட்டப் படம்!

சனி, 15 மே, 2010

அக்ஷய திரிதியை அன்னைக்கி தங்கம் வாங்குனா ரொம்ப நல்லது!

அக்ஷய திரிதியை அன்னைக்கி தங்கம் வாங்குனா ரொம்ப நல்லதாம்!....அதுலயும் வெண் தங்கம் பிளாட்டினம் வாங்குனா ரொம்ப ரொம்ப நல்லதாம்!....டி.வி.க்கள் ,பத்திரிக்கைகள் எல்லாம் அலறுது!.....அன்னைக்கி தங்கம் வாங்குறவங்க அந்த வருஷம் பூரா வாங்கிட்டே இருப்பாங்களாம்!.....அன்னைக்கி தங்கம் வாங்கினா செய்கூலி இல்ல, சேதாரம் இல்ல,தங்க நாணயம் இலவசம் வேற!...அடப் பாவிங்களா உங்க மூடத் தனத்துக்கு ஒரு அளவே இல்லியாடா?.....

பல ஜோசியர்கள் இதுக்கு கியாரண்டீ வேற குடுக்குறாங்க!...தயவு செஞ்சு வாங்குங்கன்னு கெஞ்சுறாங்க!..எல்லாம் நம்ம மக்கள் நல்லா இருக்கணும்ங்கிற நல்லெண்ணம் தான்!...ஒரு 100 வருஷத்துக்கு முன்னால கல்வி,ஜோதிடம் இதெல்லாம் தொழில் கிடையாது!ஒரு பையன் படிக்கணுன்னா வாத்தியார் வீட்ல போய் தங்கித் தான் படிக்கணும்!நோ ஃபீஸ்!ஆனா அதுக்குப் பதிலா குருவோட வீட்ல எல்லா வேலையும் செய்யனும்!..பையன் தேறிட்டான்னு வாத்தியார் நினைச்சா பையனோட அப்பாவுக்கு தாக்கல் அனுப்புவாரு!..அவரும் வந்து ஏதோ தன்னால் முடிஞ்சதை தட்சணைன்னு சொல்லிக் குடுத்துட்டு தன் பையனைக் கூட்டிக்கிட்டுப் போவாரு!

அதே போலத் தான் ஜோதிடமும்!..ஜோசியர் இவ்வளவு வேணும்,அவ்வளவு வேணும்னு யார்கிட்டயும் கேக்க மாட்டாரு!..பாக்க வற்றவங்க குடுக்குறதை சந்தோஷமா வாங்கிக்குவாரு!...ஆனா இப்போ?.........ஜோதிடர், வீட்ல போர்டே வச்சிருக்காரு ஹோட்டல் ரேஞ்சுக்கு!....திருமணப் பொருத்தம் பார்க்க...ஜாதகம் கணிக்க,பலன் சொல்லன்னு ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு ரேட்!...பரிகாரப் பூஜை பண்றேன்ணு இவனுங்க அடிக்கிறானுங்க பாருங்க ஒரு கொள்ளை!.......தெஹல்காவுக்கே சவால் தான்!....இவனுங்க கழுத்துல பாத்தீங்கன்னா ருத்ராக்ஷம்,துளசி,ஸ்படிகம்னு எல்லா ரகத்துலயும்,எல்லா டிசைன்லயும் ஒரு மாலைப் போட்ருப்பாங்க!...அப்பத் தான் நம்ம நம்புவோமாம்!.....

கடவுளை நம்பலாம்!....ஆனால் நான் தான் கடவுள் என்பவனை நம்பக் கூடாது!...
போலவே,ஜோதிடத்தைக் கூட நம்பி விடலாம்!..ஆனால் நான் தான் ஜோதிடன் என்கிறார்களே இவர்களை மட்டும் தயவு செய்து நம்பி விடாதீர்கள்!...

ஆகவே அக்ஷய திரிதியை என்பது ஒரு நல்ல நாள் அவ்வளவு தான்!..அன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதெல்லாம் வியாபாரிகள் அவிழ்த்துவிட்ட கட்டுக் கதை!...அவ்வளவே!..

ஞாயிறு, 9 மே, 2010

ஆனாலும் எனக்கு என் அம்மாவை ரொம்பப் பிடிக்கும்!.......

இன்றைக்கு அம்மாக்கள் தினமாம்!....அதுவும் சரி தான்!இதை சாக்காக வைத்தாவது நம் அம்மாவுக்கு ஏதேனும் செய்யலாமே!சின்னதாய் தாங்க்ஸ் சொன்னாலே போதுமே அவள் குளிர்ந்து போவாளே!..

கருவுற்றிருக்கும் போது என் மனைவியை அருகிலிருந்து பார்த்தவன் என்பதால் ஒரு தாயின் வேதனைகளும் வலிகளும் எனக்கு மிக நன்றாகவே தெரியும்!...நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு உணவகத்தில சாப்பிட்டிக் கொண்டிருந்தேன்!என் பக்கத்தில் கனவன்,மனைவி அவர் தம் 2 வயது குழந்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்!..குழந்தைக்காக இட்லியும்,அவர்களுக்கு பூரியும் தோசையும் ஆர்டர் செய்து அதுவும் வந்து விட்டது!..ஆனால் அந்தக் குழந்தை இட்லியை சாப்பிடுவதற்குள் அவர்களைப் படுத்திய பாடு இருக்கிறதே?....அழுது,தன்ணீர் டம்ளரைத் தள்ளி விட்டு,வாயில் உள்ளதை அம்மாவின் மேல் துப்பி என ரகளை தர்பாரே நடத்தி விட்டது!...ஆனால் அந்தத் தாய் குழந்தை சாப்பிட்ட பின்னரே சாப்பிட்டார்!..தன் குழந்தை பசியோடு இருக்கையில் ஒரு தாய் உண்ண மாட்டாள் என்பதை நான் உணர்ந்து கொண்ட தருணம் அது!....

என்னை விட 5 வயது மூத்த என் நண்பர் மனைவி பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் இருக்கும் போது அவர் அடைந்த டென்ஷனையும்,பின் குழந்தை பிறந்ததும் அடைந்த இன்பத்தையும் கண்ட போது என் பெற்றோர்கள் மீது அளப்பறிய ஒரு உணர்வு ஏற்பட்டது!...அப்போது ஒரு முடிவெடுத்தேன் என் பெற்றோர்கள் அவமானப் படும் படியாகவோ,தலை குனியும் படியாகவோ எந்த ஒரு செயலையும் செய்யக் கூடதென!...முடிந்த வரை அவர்கள் மனம் மகிழ்வுறும் வண்ணமே நடந்து வருகிறேன்!...என் அப்பாவுக்குக் காதல்,கலப்புத் திருமணம் என்றாலே பிடிக்காது!..இதற்காகவே என்னைத் தேடி வந்த இரு காதல்களை வேண்டாம் என்றிருக்கிறேன்!...எனக்கு என் பெற்றோர்கள் தான் முக்கியம் என் காதல் அல்ல!....

ஆனால் எனக்கு என் அம்மாவின் மேல் ஒரு சிறு வருத்தம் உண்டு!...அவளுக்கு சேமிப்பு,திட்டமிடுதல்,சொத்து சேர்த்தல் என்பதெல்லாம் தெரியாது!...அதனால் எங்களுக்கும் சொல்லித் தரவில்லை.எங்கள் அப்பா நிறைய சம்பாதித்தது போல் இருக்கிறது!...ஆனால் சொத்து என்று எதுவும் இல்லை.காரணம் என் தாய் என்பேன்!...

“ சேத்த பணத்தை சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
செலவு பண்ண பக்குவமா அம்மா கையில கொடுத்துப்
போடு செல்லக்கண்ணு! - அவ ஆறை நூறு ஆக்குவாடா சின்னக்கண்ணு!”
என்ற வாக்கு என் தாயிடம் செல்லாது!.....ஆறை நூறாக்க வேண்டாம் பத்தாகக் கூட ஆக்கத் தெரியாது அவ்வளவு வெகுளி!இன்றும் அப்படித் தான் இருக்கிறாள்!என் மனைவியும் இதைத் தான் சொன்னாள்!...அதை என் அம்மாவிடமும் சொல்லி விட்டாள்!.....அதற்கு என் அம்மா,”ஆமாண்டி எங்க அம்மா என்னை அப்படி வளத்துட்டாங்க என்றிருக்கிறார்!..என்ன சொல்ல?....

ஆனாலும் எனக்கு என் அம்மாவை ரொம்பப் பிடிக்கும்!.......

திங்கள், 16 நவம்பர், 2009

சாமிப் பாட்டு!................

ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் இந்த விஷயம் திடீரெனத் தோன்றியது!

சாமிப் பாட்டு, அதாங்க பக்திப் பாடல்கள்…..வினாயகர் பாட்டு,முருகன் பாட்டு,சிவன் பாட்டுன்னு பாத்தீங்கன்னா ஒரு குறிப்பிட்ட குரல் தான் அந்தந்த சாமிக்கு மேட்ச் ஆகுது.

எ.கா.வினாயகர் பாட்டுன்னா சீர்காழி,முருகன் பாட்டுன்னா TMS,அம்மன் பாட்டுன்னா L.R.ஈஸ்வரி.இதே சாமிக்குப் பலரும் பாடியிருக்காங்க ஆனாலும் ஏனோ இவங்க பாடுன பாட்டு தான் பயங்கர ஃபேமஸா இருக்கு!......இன்னிக்கும் பாருங்க ஊர்க் கோயில்ல,தெருவுல,கம்பெனியிலன்னு எங்க கல்யாணம், திருவிழா,பூஜைன்னு எந்த நல்ல நிகழ்ச்சி நடந்தாலும் வினாயகனே!.............................……………ன்னு அய்யா
சீர்காழி தான் ஆரம்பிப்பாரு,அழகென்ற சொல்லுக்கு முருகான்னு TMS அடுத்து வருவாரு அது முடிய உடனே செல்லாத்தான்னு……..ஈஸ்வரி அம்மா அப்படியே சாமியாட வச்சிருவாங்க!......

சீனியர்ஸ் எல்லாம் மெதுவாப் போனதும் பணிவா வருவாரு நமசிவாயா……. நமசிவாயா……… ஓம்நமசிவாயான்னு……..நம்ம SPB.
இப்பவும் சுப்ரபாதம்,விஷ்ணு சஹஷ்ரநாமம்னா எம்.எஸ்.அம்மா தான்!.........சஷ்டி கவசமா சூலமங்கலம் சகோதரிகள் மட்டும் தான்!.........

எவ்வளவோ பேர் இந்த கடவுள்களைப் பத்திப் பாடியிருந்தாலும் ஏன் அவங்கள்ளாம் பாப்புலராகலை?........அவங்க குரல் ஏன் மக்களுக்குப் பிடிக்காமப் போச்சு?.......

நீங்க என்ன நினைக்கிறீங்க?.................

புதன், 14 அக்டோபர், 2009

வாழ்த்துக்கள்!..........

தமது குடும்பத்தோடும்,உற்றார் உறவினர்களோடும் கொண்டாடும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும்......................

நெஞ்சார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்!..........

குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியே அயல் தேசங்களில் வருந்திக் கொண்டாடும் மற்ற பதிவுலக நண்பர்களுக்கு!..............

இனிய தீபா"வலி" வாழ்த்துக்கள்!..........