Free counter NEWS FX CASINO LATEST NEWS Foxybingo

திங்கள், 16 நவம்பர், 2009

சாமிப் பாட்டு!................

ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் இந்த விஷயம் திடீரெனத் தோன்றியது!

சாமிப் பாட்டு, அதாங்க பக்திப் பாடல்கள்…..வினாயகர் பாட்டு,முருகன் பாட்டு,சிவன் பாட்டுன்னு பாத்தீங்கன்னா ஒரு குறிப்பிட்ட குரல் தான் அந்தந்த சாமிக்கு மேட்ச் ஆகுது.

எ.கா.வினாயகர் பாட்டுன்னா சீர்காழி,முருகன் பாட்டுன்னா TMS,அம்மன் பாட்டுன்னா L.R.ஈஸ்வரி.இதே சாமிக்குப் பலரும் பாடியிருக்காங்க ஆனாலும் ஏனோ இவங்க பாடுன பாட்டு தான் பயங்கர ஃபேமஸா இருக்கு!......இன்னிக்கும் பாருங்க ஊர்க் கோயில்ல,தெருவுல,கம்பெனியிலன்னு எங்க கல்யாணம், திருவிழா,பூஜைன்னு எந்த நல்ல நிகழ்ச்சி நடந்தாலும் வினாயகனே!.............................……………ன்னு அய்யா
சீர்காழி தான் ஆரம்பிப்பாரு,அழகென்ற சொல்லுக்கு முருகான்னு TMS அடுத்து வருவாரு அது முடிய உடனே செல்லாத்தான்னு……..ஈஸ்வரி அம்மா அப்படியே சாமியாட வச்சிருவாங்க!......

சீனியர்ஸ் எல்லாம் மெதுவாப் போனதும் பணிவா வருவாரு நமசிவாயா……. நமசிவாயா……… ஓம்நமசிவாயான்னு……..நம்ம SPB.
இப்பவும் சுப்ரபாதம்,விஷ்ணு சஹஷ்ரநாமம்னா எம்.எஸ்.அம்மா தான்!.........சஷ்டி கவசமா சூலமங்கலம் சகோதரிகள் மட்டும் தான்!.........

எவ்வளவோ பேர் இந்த கடவுள்களைப் பத்திப் பாடியிருந்தாலும் ஏன் அவங்கள்ளாம் பாப்புலராகலை?........அவங்க குரல் ஏன் மக்களுக்குப் பிடிக்காமப் போச்சு?.......

நீங்க என்ன நினைக்கிறீங்க?.................

புதன், 14 அக்டோபர், 2009

வாழ்த்துக்கள்!..........

தமது குடும்பத்தோடும்,உற்றார் உறவினர்களோடும் கொண்டாடும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும்......................

நெஞ்சார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்!..........

குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியே அயல் தேசங்களில் வருந்திக் கொண்டாடும் மற்ற பதிவுலக நண்பர்களுக்கு!..............

இனிய தீபா"வலி" வாழ்த்துக்கள்!..........

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

அறியாமையே ஆனந்தம்..............

ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு Ignorance is bliss என.அது மிகச் சரி என அடிக்கடி நான் உணர்கிறேன்.

நிறைய்யப் படித்து,நிறைய்ய யோசித்துக் கஷ்டப்பட்டு,கஷ்டப்படுத்தி கொண்டு இருப்பவர்களை விட படிக்கவே படிக்காத குறிப்பிட்ட எல்ல்லையை தாண்டி யோசிக்காத மனிதர்கள் தான் மிக மிக சந்தோசமாக இருக்கிறார்கள் என்பது என் எண்ணம்.
இவர்கள் எல்லாம் ஒரு படம் பார்த்தோமா,விசில் அடித்தோமா,ஆடினோமா,வீட்டுக்கு வந்தோமா,அடுத்த வேலையைப் பார்த்தோமா என ஒழுங்காக இருக்கிறார்கள்.என்னைக் கேட்டால் இவர்கள் தான் உண்மையான ரசிகர்கள்.இவர்களால் தான் இன்னமும் திரையுலகம் ஜீவித்துக் கொண்டிருக்கிறது.திரையுலகமும் இவர்களை நம்பித் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அறிவுஜீவிகள் என நம்புபவர்கள்,தான் சினிமாவுக்குப் போகும்போது டிக்கெட்டோடு பெரிய பூதக்கண்ணாடியும் கொண்டு சென்று எத்தனை ஓட்டை இருக்கிறது,ஒடிசல் இருக்கிறது எனக் கணக்கிட்டு வீட்டிற்கு வந்ததும் அதை வெளியே ஊர் பூராவும் சொல்லி " பாத்தியா எனக்கு எவ்வளோ அறிவு இருக்கு " எனக் காண்பித்து சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.இவர்கள் எல்லாம் எப்படி சாப்பிடுகிறார்கள் எனத் தெரியவில்லை.சாப்பாட்டில் கூட இந்த மிளகு கம்யுனிசம் பேசும் கேரளா,இந்தப் பருப்பு ஆந்திரா என ரிஷிமூலம்,நதிமூலம் எல்லாம் பார்த்து நோண்டி நுங்கடுத்துத்தான் சாப்பிடுவார்களோ?.........

இப்படி சாப்பிட்டால் அந்த உணவின் ருசியை எப்படி உணர முடியும் அனுபவிக்க முடியும்?..........சாப்பிட்டு முடித்ததும் உப்போ,புளிப்போ,காரமோ எது சரி இல்லையோ அதை சரியாய் சொல்வதை விட்டு விட்டு சமையல்காரரின் பூர்வீகம்,மளிகை வாங்கிய கடையின் நிலை,என ஏதேதோ உளறி..........அடப் போங்கய்யா என ஆகிவிடுகிறது.

ஒரு படத்தில் சொல்வதை போல........."பழமொழி சொன்னா ரசிக்கணும் ஆராயக் கூடாது!"..............அதே தான் ஒரு திரைப்படத்திற்கும்.

புதன், 10 ஜூன், 2009

எங்க சொல்லுங்கப் பாப்போம்?

உங்கள் ஆன்மீக ஞாபக சக்திக்கு ஒரு சிறிய சோதனை.....!( கொஞ்சம்........ இல்ல ரொம்ப ஓவரா இருக்கோ )
ராமாயணத்தில்,தசரதர் இளம் வயதில் காட்டுக்கு வேட்டையாடப் போய்,அங்கே தன் பெற்றோரை தோளில் சுமந்து செல்லும் சிரவ்ணனை தண்ணீர் குடிக்க வந்த யானை என நினைத்து அம்பு எய்திக் கொன்றான் இல்லையா?......
அந்த அம்பின் பெயர் என்ன?.............................
விடைகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்க மக்கா................

( உஸ்ஸ் ஹப்பா ஒரு பதிவு போட எப்படி எல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு...)

திங்கள், 8 ஜூன், 2009

முப்பாட்டனார்,பாட்டனார்..........?

சென்ற வாரம் விஜய் டி.வி.யில் நீயா நானா நிகழ்ச்சியில் நம் பதிவுலக நண்பர் திரு.செல்வேந்திரன் அவர்கள் ஒரு கருத்தை சொன்னார்.நாம் நம் தலைமுறையைப் பற்றிய வரலாறைத் தெரிந்து கொள்வதில்லை என.அது எனக்கு மிக சரி எனப் படவே என் தலைமுறையைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பி என் அம்மாவிடம் கேட்டேன்.பின்னர் என் அப்பாவிடமும்.அவர் நீண்ட யோசனைக்குப் பின் சில தகவல்கள் சொன்னார்.என் அம்மாவுக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை.பின் என் தூரத்து உறவினர் ஒருவரிடமும் கேட்டு சில தகவல்கள் பெற்றேன்.மூன்று தலைமுறை பற்றி தெரிந்து கொள்ளவே அதுவும் என் மூதாதையர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவே நாக்கு தள்ளி விட்டது.கொஞ்சம் செலவும் ஆகியது.எனக்கு இப்போது தான் வரலாற்றின் மீதும்,வரலாற்று ஆய்வாளர்கள் மீதும் பெரிய மதிப்பே வந்தது.உண்மையில் அவர்களுக்குத் தலை வணங்குகிறேன்.சேர,சோழ,பாண்டிய மன்னர்கள்,நாயன் மார்கள்,ஆழ்வார்கள் என எத்தனை விதமான வரலாற்றையும் அவர்களை பற்றிய பாடல்களையும்,கல்வெட்டுக்களையும் எவ்வளவு கஷ்டப்பட்டுத் தேடி இருப்பார்கள் என நினைக்கும் போதே மிகப் பிரமிப்பாய் இருக்கிறது.ஆர்வம்,தேடல் என்கிற இரண்டு விஷயங்கள் தான் அவர்களை வழி நடத்திஇருக்கிறதுஅவைகள் தாம் எத்தனை சோதனை வந்தாலும் தாங்கச் செய்திருக்கிறது.
இனி என் தலைமுறையைப் பார்ப்போம்.......
முப்பாட்டனார்..........
இவர் பெயர் குப்பய்யர்....நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள வீரவநல்லூர் என்னும் கிராமத்தில் மிக ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்.குருகுலம் என்னும் பள்ளிக்குப் போகாதவர்.என்ன காரணம் எனத் தெரியவில்லை.அருகிலிருக்கும் திரௌபதி அம்மன் கோவிலில் அர்ச்சகராகவும் மீதி நேரங்களில் குடும்பத் தொழிலான பட்டு நெசவும் செய்து வந்தார். மனைவி பெயர் தெரியவில்லை.இவருக்கு ஒரே மகன் என் பாட்டனார்.
பாட்டனார்...............
பெயர் ராமசுப்ரமணியம்.பிறந்தது வீரவநல்லூரில்.மனைவி பெயர் தேவகி.தன் தந்தையைப் போலவே அர்ச்சகராகவும் மீதி நேரங்களில் குடும்பத் தொழிலான பட்டு நெசவும் செய்து வந்தார்.பின்னர் வருமானம் போதாமலும் மனைவியின் சொல் கேட்டும் மதுரைக்குக் குடி பெயர்ந்தார்.இங்கேயும் அதே தொழில்.உபரியாக கும்பாபிஷேகம்,திருமணம்,கிரஹப்பிரவேசம் போன்ற சுபகாரியங்களை நடத்தி வைப்பவராகவும் இருந்தார்.பின்னர் நெசவுத் தொழிலை முற்றிலும் விட்டு விட்டு இதை மட்டுமே செய்தார்.வார இறுதிகளிலும்,மதிய நேரங்களிலும் ஜோதிடத் தொழிலும் செய்தார்.இவர் சொன்ன பரிகாரங்கள் மிக சரியாக இருந்தன என்று என்னிடமே பலர் சொல்லி இருக்கிறார்கள்.தன் 64 வயதில் காலமானார்.
பல முயற்சிக்குப் பின்னும் என்னால் இவ்வளவு தகவல்களே திரட்ட முடிந்தது.என் மகனுக்குக் கட்டாயம் இவற்றை சொல்வேன்.இன்னும் தேடுவேன்.

வெள்ளி, 5 ஜூன், 2009

வி. பி.எல்.,

கலைஞர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை வி. பி.எல்., என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.நான்கு பேர் அமர்ந்து கொண்டு போடும் மொக்கை இருக்கிறதே........அடேயப்பா.......அவர்களை மிஞ்ச யாராலும் முடியாது.அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் பரமார்த்த குருவும் சீடர்களும் கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது.இதில் ஒரு மிகப் பெரிய கொடுமை சில புண்ணியவான்கள் வேறு போன் போட்டு கருத்துக் குத்தைக் குத்துகிறார்கள்.
அந்த நாலு பேர்..................
பாஸ்க்கி...........இவர் தான் பரமார்த்த குரு..........கடி ஜோக்குகளுக்கு இவர் ஏற்கனவே பேர் போனவர்.கூட இருக்கும் மூன்று பேரை சமாளித்த படியே உளறுவது தான் இவர் வேலை.தினமும் திருப்பதி போய் வந்த மாதிரியே இவர் மண்டை இருக்கிறது.

நாணி............இவருக்கு தான் தான் உலகத்திலேயே அதி புத்திசாலி என்கிற நினைப்பு.இவர் யார் எந்தக் கருத்து சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.இவர் என்ன சொல்கிறாரோ அது தான் சரி. இவர் சொல்லும் இல்லை உதிர்க்கும் சொல் முத்துக்கள் இருக்கிறதே வர்ணிக்க வார்த்தைகள் போதவில்லை.அவர் உதிர்த்தத்தில் ஒரு சிறிய முத்து......
பெண்கள் கல்யாணம் ஆகும் வரை அப்பா பேச்சைத் தான் கேட்க்க வேண்டும் பின் கணவன் சொன்ன சொல்லை மட்டும் கேட்டு பணிந்து அடங்கி நடக்க வேண்டும் அப்போது தான் பெண்களுக்கு நல்லது.எப்பூடி.........................

நீலு........இவர் ஒரு சீனியர் நாடக மற்றும் சினிமா நடிகர்.இவருக்கு தற்ப்போது ஏழரை சனி நடக்கிறது போல.இங்கே வந்து மாட்டிக் கொண்டு விட்டார்.அருகிலிருக்கும் ஒருவரிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்பதிலேயே இவருக்கு நேரம் போய் விடுகிறது.பாவம்....................

கடைசியாக ஒரு ஆங்கில அகராதி இவர் பேர் தெரியவில்லை.இவர் ஆங்கிலம் பேசுகிறேன் பேர்வழி என்று போடும் மொக்கை இருக்கிறதே........நிகழ்ச்சி துவங்கும் முன் வாய் நிறைய Blade -ஐ முழுங்கி விட்டு வந்து கடித்துத் துப்புகிறார் மனுஷன்.

கலைஞர் டி.வி.யினர் ஒன்று இந்த நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் அல்லது இந்த மொக்கை மன்னார் சாமிகளையாவது மாற்ற வேண்டும். செய்வார்களா?.........

புதன், 3 ஜூன், 2009

ஜாங்கிரி!............

எப்போடா நாம இதை சாப்பிடப் போறோம்!....

ஆரஞ்சுக் கலரில் கூரையிலிருந்து சொட்டு சொட்டாய் ஒழுகும் மழை நீரைப் போல பாகு ஒழுகிக் கொண்டிருந்த ஜாங்கிரியை பார்க்கும் போதெல்லாம் இதே எண்ணம் தான் மணிக்கு.

மணி..........ஆந்திராவில் ஊருக்கு ஒதுங்கிய ஒரு தொழிற்பேட்டையில் இருக்கும் தொழிற்சாலையில் எடுபிடி வேலை செய்யும் அடிமை......ஆம் அடிமை தான்.அவன் செய்யும் வேலைக்கு மூன்று வேளை கஞ்சியும் படுத்துக் கொள்ள எலிப் பொந்தும் தான்!சம்பளம் எல்லாம் இல்லை.அங்கிருந்து தப்பித்தும் போக முடியாது.அப்போது அது அடிமை வேலை தானே?

அது ஒரு பெரிய இரும்புத் தொழிற்சாலை.இவனை ஒத்த சிறுவர்கள் இன்னும் நிறைய்ய பேர் இருந்தார்கள்.காலை 7 மணிக்கு துவங்கும் வேலை முடிய இரவு எட்டாகி விடும்.இடையில் டீ எனப்படும் வெந்நீர் கிடைக்கும்.அதுவும் இரு முறை மட்டுமே.மதியம் மஞ்சள் கலர் சோறு ஒரு தட்டு,ஒரு கப் கீரை மட்டும் கிடைக்கும்.அதையும் அதைப் பழகியவர்களால் மட்டுமே சாப்பிட முடியும்.

மணி எப்படி இங்கே வந்தான்?.............நீங்கள் அடிக்கடி சினிமா பார்ப்பவரா?அதுவும் தமிழ் சினிமா?.....அப்படிஎன்றால் இவன் பிளாஷ்பாக் கூட உங்களுக்கு மிகப் பரிச்சயமான ஒன்று தான்.பணக்கார வீட்டுப் பிள்ளை......தாய் இல்லை.....தந்தைக்கு எப்போதும் பிசினஸ் தான்............எனவே கவனிப்பு,பாசம்,கண்டிப்பு இத்யாதி இத்யாதி எதுவுமில்லை.So,வெறுத்துப் போன பிள்ளை வீட்டை விட்டு வெளியேறி............ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் புரிந்திருக்கும்.............!

இரவு எட்டு மணி,வேலை முடிந்து கொட்டடிக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் மணி.காலையில் சுட்டு வைத்த ஜாங்கிரி பீச்சில் காத்திருக்கும் காதலன் போலக் காத்துக் கொண்டிருந்தது வெறுமையாய்.அதைப் பார்த்தவுடன் மணியின் கால்கள் தன்னால் ப்ரேக்கிட்டு நின்றது.

ஒன்னு எவ்வளோ என்றான் சைகையில்.

கடைக்காரனும் புரிந்து கொண்டவனாய் இரண்டு ரூவா என்றான் மோசமான தமிழில்.

2 ரூபாய் என்பது மிகப் பெரிய பணம் மணிக்கு.ஜாங்கிரி ஆசை கனவாய் கலைந்து போய் விடும் போலிருந்தது.தளர்வாய் நடை போடத் தொடங்கினான்.

ராத்திரி கனவெல்லாம் ஜாங்கிரி தான்.இவனுக்குப் பிறந்த நாள் விழா.தட்டு நிறைய்ய ஜாங்கிரிகள்.இரண்டு கைகளிலும் அள்ளி அள்ளி எடுத்துத் தின்றான்.முகமெல்லாம்,சட்டையெல்லாம்,உடலெல்லாம் ஜாங்கிரியும் பாகும் வழிந்தோடிக் கொண்டிருந்தது.பட்டென்று முழிப்பு வந்தது.ச்சே எல்லாம் கனவு.வேறு கனவு.கனவு கலைந்து அழுகையாய் மாறியது.மெதுவாய் மிக மெதுவாய் ரகசியம் பேசுவது போல் அழத் துவங்கினான்.அவனால் அப்போதைக்கு செய்ய முடிந்தது அது ஒன்று தான்.எனவே அதை நன்றாகவே செய்தான்.

அழுகை முடிந்த போது விடிந்து விட்டிருந்தது.மனம் மட்டும் இன்னும் இருட்டாய்.கதைகள் சினிமாக்களில் எல்லாம் நடக்குமே அதே போல நடந்தது மணிக்கு.ஆம் அவன் காலை வேலைக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது வழியில் ரோட்டில் சிறிய வட்ட வடிவ ஐந்து ரூபாய் நாணயம் பூமிக்குள்ளிருந்து லேசாக எட்டிப் பார்த்து சிரித்தது.இவனால் நம்பவே முடியவில்லை.பர பரவென்று சுற்றும் முற்றும் பார்த்தான்.நல்ல வேலை யாருமில்லை.அவன் குனிந்தும்,காசை எடுத்துப் பையில் போட்டதும் சீதையை மணக்க ராமன் வில்லை ஒடித்த வேகத்தில் நடந்தது.

மணிக்கு இருப்புக் கொள்ளவில்லை.அடிக்கடி தடவிப் பார்த்துக் கொண்டிருந்தான் தன் ட்ரௌசெர் பையை.எப்போடா இரவு ஆகுமென்றிருந்தது.அது மட்டுமல்ல இவன் போகும் நேரத்தில் ஜாங்கிரி தீர்ந்து போய் விட்டது என்று கூறி விடுவனோ என கவலை வேறு.

ஒரு valiyaai வேலை முடிந்து எல்லோரும் கொட்டடிக்குத் திரும்பத் தொடங்கினார்கள்.மணி மெதுவாய் வெளியே வந்தான்.எல்லாரும் முன்னே நடக்க விட்டு இவன் கடைசியாய் நடந்தான்.பின்னே இவன் ஜாங்கிரி சாப்பிடுவதை வேறு யாரும் பார்த்து விட்டால் ஏதடா காசு என்று அடிப்பார்கள்.எனவே கர்ப்பிணிப் பெண்ணாய் மெல்ல நடை போட்டான்.

கடைக்காரனைப் பார்த்து காது வரை பல்லிளுத்து டௌசெர் பைக்குள்ளிருந்து மெதுவாய் அந்த 5 ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொடுத்தான்.கடைக்காரன் நம்ப முடியாதவனாய் காசை திருப்பித் திருப்பிப் பார்த்து விட்டு மூன்று ஜாங்கிரிகளை பேப்பரில் சுற்றிக் கொடுத்தான்.

வாங்கிய மணி ஒரு ஓரமாய் சென்று உட்கார்ந்து மெதுவாய் பிரிக்கத் தொடங்கி அதை ஆசை ஆசையைப் பார்த்தான்.ஒன்றை எடுத்துக் கடிக்கத் தொடங்கிய படியே சுற்றி இருந்த பேப்பரை உன்னித்துப் பார்த்தான்.

வாய் அசைவதை நிறுத்தியது.கண்கள் அந்தப் பேப்பெரையே பார்த்துக் கொண்டிருந்தது.மெதுவாய் கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக் கன்னத்தில் வழிந்து வாய்க்குள் விழுந்தது இப்போது ஜாங்கிரி கொஞ்சம் உப்புக் கரிக்கத் துவங்கியது.

பேப்பரில், தெலுங்கில் என்னமோ எழுதி கீழே இவன் சிரிக்கும் போது எடுத்த போட்டோ இருந்தது.

டிஸ்க்கி: சிறுகதைப் போட்டிக்கான எனது கன்னி முயற்சி.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

ஏன் இப்படி?..........

மிக நல்ல திறமை இருக்கிறது.........லட்சக்கணக்கானோர் பாராட்டி விட்டார்கள், பாராட்டுகிறார்கள், பாராட்டுவார்கள்!...........
இவர் படம் தாங்கிய எல்லாவற்றுக்கும்/எவற்றுக்கும் ஒரு சிறப்பு மரியாதை இருக்கும்!........
இவர் தயவால் புகழும் பணமும் அடைந்தவர்கள் ஏராளம்!....
இருபது வருட காலம் ஒரு சாம்ராஜ்யமே நடத்தியவர்.................
எல்லாம் இருக்கிறது.........ஆனால்..............இன்னும் இவருக்கு ஏனோ உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை!......
இவருக்கு சமமான இவருக்குப் பின் வந்த ஒருவருக்கு அந்த உலக அங்கீகாரம் கிடைக்கும் போது இவர் மனம் என்ன நினைத்திருக்கும்...........?
உள்ளம் நிச்சயம் கொஞ்சமாவது பொறாமைப் பட்டிருக்கும்.......கண்ணீர் சிந்தியிருக்கும் ..... ! கோபம் கொண்டிருக்கும்.........!
அப்படி செய்வது நிச்சயம் சரியே........அந்த நிலையில் இருப்பவருக்கே அந்த வலியும் வேதனையும் புரியும்!..............
வேடிக்கை பார்க்கும் நமக்கு தான் அது செய்தியே தவிர அந்த இதயத்துக்கு அல்ல!..
துன்பம் வரும் வேளைகளில் வள்ளுவன் சொன்னதை போல் நாங்கள் சிரித்ததில்லை ஆனால் உன் பாட்டைக் கேட்டிருக்கிறோம்!..உனக்கே அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டது!.......
உன் இசையை உச்சரிக்கும் உதடுகள் இருக்கும் வரையில் உனக்கு மரணமில்லை!....வெள்ளைக்காரன் தராவிட்டால் என்ன........உன் தமிழன் நாங்கள் தருகிறோம் 1000 ஆஸ்கார்கள்......!

இசை ஞானியே..................ஓங்கட்டும் உனது புகழ்!.........