சென்ற வாரம் விஜய் டி.வி.யில் நீயா நானா நிகழ்ச்சியில் நம் பதிவுலக நண்பர் திரு.செல்வேந்திரன் அவர்கள் ஒரு கருத்தை சொன்னார்.நாம் நம் தலைமுறையைப் பற்றிய வரலாறைத் தெரிந்து கொள்வதில்லை என.அது எனக்கு மிக சரி எனப் படவே என் தலைமுறையைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பி என் அம்மாவிடம் கேட்டேன்.பின்னர் என் அப்பாவிடமும்.அவர் நீண்ட யோசனைக்குப் பின் சில தகவல்கள் சொன்னார்.என் அம்மாவுக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை.பின் என் தூரத்து உறவினர் ஒருவரிடமும் கேட்டு சில தகவல்கள் பெற்றேன்.மூன்று தலைமுறை பற்றி தெரிந்து கொள்ளவே அதுவும் என் மூதாதையர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவே நாக்கு தள்ளி விட்டது.கொஞ்சம் செலவும் ஆகியது.எனக்கு இப்போது தான் வரலாற்றின் மீதும்,வரலாற்று ஆய்வாளர்கள் மீதும் பெரிய மதிப்பே வந்தது.உண்மையில் அவர்களுக்குத் தலை வணங்குகிறேன்.சேர,சோழ,பாண்டிய மன்னர்கள்,நாயன் மார்கள்,ஆழ்வார்கள் என எத்தனை விதமான வரலாற்றையும் அவர்களை பற்றிய பாடல்களையும்,கல்வெட்டுக்களையும் எவ்வளவு கஷ்டப்பட்டுத் தேடி இருப்பார்கள் என நினைக்கும் போதே மிகப் பிரமிப்பாய் இருக்கிறது.ஆர்வம்,தேடல் என்கிற இரண்டு விஷயங்கள் தான் அவர்களை வழி நடத்திஇருக்கிறதுஅவைகள் தாம் எத்தனை சோதனை வந்தாலும் தாங்கச் செய்திருக்கிறது.
இனி என் தலைமுறையைப் பார்ப்போம்.......
முப்பாட்டனார்..........
இவர் பெயர் குப்பய்யர்....நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள வீரவநல்லூர் என்னும் கிராமத்தில் மிக ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்.குருகுலம் என்னும் பள்ளிக்குப் போகாதவர்.என்ன காரணம் எனத் தெரியவில்லை.அருகிலிருக்கும் திரௌபதி அம்மன் கோவிலில் அர்ச்சகராகவும் மீதி நேரங்களில் குடும்பத் தொழிலான பட்டு நெசவும் செய்து வந்தார். மனைவி பெயர் தெரியவில்லை.இவருக்கு ஒரே மகன் என் பாட்டனார்.
பாட்டனார்...............
பெயர் ராமசுப்ரமணியம்.பிறந்தது வீரவநல்லூரில்.மனைவி பெயர் தேவகி.தன் தந்தையைப் போலவே அர்ச்சகராகவும் மீதி நேரங்களில் குடும்பத் தொழிலான பட்டு நெசவும் செய்து வந்தார்.பின்னர் வருமானம் போதாமலும் மனைவியின் சொல் கேட்டும் மதுரைக்குக் குடி பெயர்ந்தார்.இங்கேயும் அதே தொழில்.உபரியாக கும்பாபிஷேகம்,திருமணம்,கிரஹப்பிரவேசம் போன்ற சுபகாரியங்களை நடத்தி வைப்பவராகவும் இருந்தார்.பின்னர் நெசவுத் தொழிலை முற்றிலும் விட்டு விட்டு இதை மட்டுமே செய்தார்.வார இறுதிகளிலும்,மதிய நேரங்களிலும் ஜோதிடத் தொழிலும் செய்தார்.இவர் சொன்ன பரிகாரங்கள் மிக சரியாக இருந்தன என்று என்னிடமே பலர் சொல்லி இருக்கிறார்கள்.தன் 64 வயதில் காலமானார்.
பல முயற்சிக்குப் பின்னும் என்னால் இவ்வளவு தகவல்களே திரட்ட முடிந்தது.என் மகனுக்குக் கட்டாயம் இவற்றை சொல்வேன்.இன்னும் தேடுவேன்.
1 கருத்து:
அட, உங்களுக்கு பூர்விகம் நம்மூரா...
கருத்துரையிடுக